பக்கங்கள்

Tuesday, June 10, 2008

காதலின் நீளம்...

என் மனசுக்குள்நீ
பதித்துப் போன காலடித் தடங்களில்
இன்னும் இருக்குதடி ஈரம்.

என் விடியலின் நீளம்
உன்னால் இன்னும்
கூடிக்கொண்டே போகுதடி.

யாருக்கும் தெரியாமல்
கசியும் என் கண்கள்
தொலைத்த தூக்கங்கள் தான் எத்தனை எத்தனை...

என் சுகமும், துக்கமும்
நீதான் என ஆனபின்
துரந்தேன் யாவட்ரையும்
உனக்காக.....

என் கண்களின் ஈரமும்,
மனசுக்குள் உன் காலடி காலடி ஈரமும்
காய்வதற்க்குள் என்
கை பிடித்து விடடி என் அன்பே...

Saturday, June 7, 2008

இதுதாண்டா அரசியல் .. பழைய மொந்தை....

ரொம்ப நாள் கழித்து அரசியல் ஜோக்ஸ் பார்த்த போது இதை மீண்டும் பார்க்க நேர்ந்தது. என்ன தான் பழையது என்றாலும் இப்போதும் இது பொருந்துகிறது ..

காதலியின் எச்சிலில் சாப்பாட்டின் ருசி

எது சுவையான சாப்பாடு?
நல்ல ஹோட்டலில் தான் சுவையான உணவு கிடைக்கும் என்று நம்ம ஆட்கள் கடைகளை தேடி வெகு தூரம் அலைகிறார்கள் . அதனால்தான் மாமி மெஸ் களும் , மாமா மெஸ் களும் அங்கே இங்கே கடை போட்டு இருக்கின்றன. உண்மையில் சாப்பாடு மட்டும் சுவையைத் தருவதில்லை. சாப்பிடும் இடமும், சூழ்நிலையும் ருசியை அதிகரிக்கின்றன அல்லது குறைக்கின்றன. சில சமயம் பரிமாறுபவர்கள் கூட, பரிமாறும் விதத்தில் கூட சுவையைக் கூட்டுகின்றனர். உதாரணமாக, தொலை தூரத்தில் ஒரு மலைக்கோயிலில் கடைகளே இல்லாத இடத்தில், நல்ல உச்சி வெயிலில் உங்களுக்கு வெண்பொங்கல் கெட்டிச்சட்னியுடனோ அல்லது புளியோதரயோ உங்களுக்கு கிடைத்தால் நிச்சயம் அது உங்களுக்கு அமிர்தம் போலத்தான் அது சுமாராக இருந்தாலும்.
ஊர்ப்பக்கம் வயல் காடுகளில் கூலி வேலைக்கு செல்வோர், சாப்பாட்டில் மோர் விட்டுக் கரைத்து வெங்காயம், பச்சை மிளகாய், மோர் மிளகாய் வகையரக்களுடன் மதிய சாப்பாடு கொண்டு செல்வர். நல்ல உச்சி வெயிலில், வயலில் இந்த உணவை விரும்பாதோர் இருக்க முடியுமா
ஆற்றோரங்களில் அப்போதே மீன் பிடித்து அங்கேயே மிகக் குறைந்த மசாலா கொண்டு வறுத்துதரும் மீன் வறுவல் உங்கள் நாவில் எச்சில் உண்டாக்க வில்லையா ?? இந்த சுவை 5 ஸ்டார் ஹோட்டெல்களில் கூட கிடைக்காது. என்ன சொல்றீங்க ?
அப்புறம் காதலன்களுக்கு, காதலியின் எச்சில் ஐஸ்கிரீம் எவ்வளவு சுவையாக இருக்கும் என்பதெல்லாம் வேறு விஷயம். ஒரே இள நீரில் இரண்டு ஸ்ட்ரா போட்டு குடிப்பது .. ஹி .. ஹி.. ஹீ.. அதெல்லாம் தேவாமிர்தம். புது மனைவியின் சாப்பாடு ரொம்பவே ருசிக்கும் வாய்ல வைக்க முடியாட்டியும்... அப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சு இவனே சாப்பாடு செய்ய கற்றுக் கொள்வான் வேறு வழி இல்லாமல்.
மொத்தத்தில சாப்பாடு மட்டும் ருசியை கொடுப்பதில்லை ... இடமும், சூழ்நிலையும், பரிமாறுபவர்கள் எல்லாம் சேர்ந்து தான் ருசியை தீர்மானிக்கின்றன.

Friday, June 6, 2008

என்ன கொடும சார் இது..

முன்னுரை : இது என் சொந்தக் கருத்தே அன்றி வேறல்ல.... யார் மனதையும் புண்படுத்துவது என் நோக்கமும் அல்ல......
இனி என்னுரை ....
என்னடா இவன் மத துவேசங்களை ஏற்படுத்த நினைக்கிறானோ என்று யாரும் என்ன வேண்டாம். மத சமுதாயத்தை விட மனித சமுதாயத்தை விரும்புகிறவன் நான். நான் ஒரு இந்து என்பதால் என்னை பாதித்த நிகழ்வுகளை இங்கு குறிப்பிடுகிறேன். பொதுவாக ஒவ்வொரு மதமும் தனக்கென ஒரு நெறி முறைகளை வகுத்திருக்கிறது. எ கா.. பொதுவாக கிருத்துவர்கள் கிருத்துவ மதத்தைப் பற்றியோ அல்லது இசுலாமியர்கள் இசுலாமிய மதத்தை பற்றியோ யாரிடத்தும் கிண்டல், கேலி செய்வதில்லை. ஆனால் நம் இந்துக்கள் (குறிப்பிட்ட சிலர் ) நமது மதத்தை பற்றியும், கடவுள்களைப் பற்றியும் எல்லை மீறி கிண்டல், கேலி செய்கிறார்கள். சுருக்கமாக, சேற்றை வாரி தங்கள் மேலே போட்டுக் கொள்கிறார்கள். சில சினிமாக்களும் இதற்க்கு விதி விலக்கல்ல. எ கா... சூரியன் படத்தில் ஒரு பாடல் 18 வயது இளமொட்டு மனது ... கந்த சஷ்டி கவசத்தை நாறடித்து விட்டார்கள். எங்கு சஷ்டி கவசத்தை கேட்டாலும் இந்த சினிமா பாடல் ஒரு முறையாவது நியாபகத்தில் வந்து போகிறது. கடவுளர்களின் திருமணங்களை கிண்டல் செய்தும், காமடி வசனம் எழுதியும் பல படங்கள் இன்னும் வந்து கொண்டுதானிருக்கிறது . வருஷம் ஒரு முறை ஊர்ப்பக்கம் செய்யப்படும் திருவிழாக்கள் இன்னும் மோசம். மாரியம்மன் கோவில் விசேசத்தில் நேத்து ராத்திரி யம்மா.. பாட்டு தான் பிரதானமாக ஒலிக்கிறது.
வருஷம் முழுதும் சினிமா பார்கிறாய், பாட்டைக் கேட்கிறாய் ... சரி .. அடஒரு நாள் சாமி பாட்டு கேட்க்க கசக்கிறதா.... இன்னும் ஒரு படி மேலே போய் ரிக்கார்ட் டான்ஸ் ....என்ன கொடும சார் இது... இதுவே ஒரு சர்ச் இல் அல்லது மசூதியில் என்றாவது ஒரு நாள் நீங்கள் குத்துப் பாட்டை கேட்டு இருக்கிறீர்களா .. கிருஸ்துமஸ் அன்றோ ரம்ஜான் அன்றோ ரிக்கார்ட் டான்ஸ் பார்த்திருகிரீர்களா ??? ஆனால் நாம் நம்முடைய மனசாட்சியை என்றோ கழற்றி வைத்து விட்டோம் . மட்டுமல்ல , அதைப் பற்றி கவலைப் படக் கூட மறந்து விட்டோம்.
என்று நாம் இது போன்ற மதத்தை இழிவு படுத்தும் செயல்களை உணரப் போகிறோம். அட அரசியல் வாதிகளை எடுத்தக் கொள்ளுங்களேன். அவர்கள் இந்து மதத்தைப் பெண்டு நிமித்துகிறார்கள். எதோ அவர்கள் பங்குக்கு அவர்கள் .... இதே ..வேறு மதத்தைப் பற்றி கிண்டல் செய்யட்டும் பார்க்கலாம். அவர்கள் ஒழுங்காக ஊர் போய் சேர முடியாது. ஆனால் நமது மதத்தை பற்றி கிண்டல் செய்து விட்டு கை தட்டல் வாங்கி விட்டு பத்திரமாக ஊர் போய் சேர்வார்கள். ஏனெனில் இது இந்தியா , நாம் இந்தியர்கள் .....

Thursday, June 5, 2008

சிம்புவின் பதிவு நீக்கம்

சிலர் சிம்புவின் பதிவுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதால் இந்த வலைப்பதிவிலிருந்து இதை நீக்குகிறேன்.

Wednesday, June 4, 2008

முதல்வருக்கு ஒரு பகிரங்க கடிதம்

நீங்கள் மனசாட்சியுடயவர்களாயின், இந்த கடிதத்தை நீங்கள் படிப்பதுடன் நிறுத்தாமல் இதில் உங்கள் கருத்துக்களை பின்னூட்டமளியுங்கள். மட்டுமல்ல, இதை உங்கள் நண்பர்களிடத்தும் கொண்டு சேருங்கள். ஒரு கை தட்டினால் ஓசை வருவதில்லை..... உங்கள் கைகளையும் சேர்த்து தட்டுங்கள் .... ஓசை ஒலிக்கட்டும் ... பலமாக......
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு .....
வணக்கம். தங்களின் 85 வது பிறந்த நாளை கொண்டாடிய இந்த வேளையில் உங்கள் முன் சில கோரிக்கைகளை வைக்கிறேன். நடப்பவைகளை கண்டு ஏதேனும் செய்ய முடியாதா இந்த சமூகத்திற்கு என்னும் ஆற்றாமையில் தான் இதை உங்களுக்கு எழுதுகிறேன்.
கோரிக்கை 1 :
பேருந்தில் நெடுந்தூரப் பயணங்கள் எல்லாருக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. எல்லா மக்களும் பெரும்பாலும் பேருந்தையே பயன்படுத்துகிறார்கள். ஆனால் பேருந்து நிலையங்களின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது? பேருந்து நிலையங்களில் பேருந்து நுழையும் முன்பே எல்லோரும் மூக்கைப் பொத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. அவ்வளவு துர் நாற்றம். மட்டுமல்ல, கிருமிகளின் கூடாரமும் கூட... எச்சில் களை, குப்பைகளை மிதிக்காமல் எங்கும் நகர முடியாது.
ஒவ்வொரு ஆட்சியும் , அரசியல்வாதிகளும் ஆட்சிக்கு வர இலவசங்களை வாரி இறைக்கிறார்கள். தாங்கள் கூட இலவச கலர் டிவி முதல் கியாஸ் அடுப்பு வரை அளித்திருக்கிறீர்கள். ஆனால் உண்மையாக தேவைப்படும் இலவசம் எது தெரியுமா? பேருந்து நிலையங்கள் முதல் அனைத்து சுற்றுலா தளங்கள் வரை அனைத்து பொது இடங்களிலும் இலவச பொதுக் கழிப்பிடங்களை அரசு சார்பில் அமைக்க வேண்டும். 2 ரூபாய்க்கு அரிசி என்கிறீர்கள் ...ஆனால் 2 ருபாய் கொடுத்து தானே சிறுநீர் கழிக்க முடிகிறது. சாமான்யர்களும், நடுத்தர மக்களும் இதற்க்கு ரொம்பவே யோசித்துதான் பொது இடங்களை திறந்த வெளி கழிப்பிடங்களாக மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
வெளி நாட்டுப் பயணிகள் முகம் சுளிப்பதுடன், தமிழ்நாடே ஒரு கூவம் போல நாற்றமெடுக்கிறது. சரி, காசு கொடுத்துதான் பொதுக் கழிப்பிடம் செல்கிறோம் என்றே வைத்துக் கொள்ளுங்கள். அதன் இன்றைய பராமரிப்பு எப்படி இருக்கிறது.. உடைந்த கதவுகள்... கைகளால் தொட முடியாத டப்பா .. நாற்றமெடுக்கும் அறைகள் ... இதற்கே 2 ருபாய் ... சுகாதாரமான சமூகத்தை உருவாக்குவது அரசின் கடமை... எனவே இலவச பொதுக் கழிப்பிடங்களை உடனடியாக அமல் படுத்துவதுடன் முறையான பராமரிப்பும் நடைபெற ஆவன செய்ய வேண்டும்.
கோரிக்கை 2 :
நெடுந்தூரப் பயணங்களில் பேருந்துகள் அவர் அவர்களுக்கு பிடித்த நெடுஞ்சாலை உணவகங்களில் பேருந்தை நிறுத்துவது வாடிக்கை. ஆனால் அங்கே எவ்வளவு கொள்ளை நடக்கிறது தெரியுமா? வேறு வழியே இல்லாமல் பயணிகள் இந்த உணவகங்களில் யானை விலை , குதிரை விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். ( உதாரணத்திற்கு ... 13 ரூபாய் தண்ணீர் பாட்டிலின் விலை இங்கே 17 ரூபாய். 20 ரூபாய் குளிர் பானத்தின் விலை 27 ரூபாய். பொது மக்கள் என்ன பாவம் செய்தார்கள் . இந்த தினசரி பகல் கொள்ளைக் கு அரசின் நடவடிக்கை தான் என்ன ??? உடனடியாக இந்த வணிகர்களை தடை செய்வதுடன் அரசே தமிழ்நாடு சுற்றுலா கழகம் சார்பில் இத்தகைய கடைகளை நியாயமான முறையில், நியாய விலையில் நடத்த உத்தரவிட வேண்டும்.
கோரிக்கை 3 :
பிளாஸ்டிக் குப்பைகள் எங்கும் பெருகி வரும் நிலையில் சுற்றுச் சூழல் மிகவும் சீர்கெட்டு விட்டது. அனைத்து விலங்குகளும் இவைகளை உண்டு மரணிக்கின்றன. எனவே, குறிப்பிட்ட தடிமன் இல்லாத பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும். பேப்பர் கப், தொன்னை போன்றவற்றின் உற்பத்திக்கும், விற்பனைக்கும் மானியம் அளிக்க வேண்டும்.
GREEN CITY, CLEAN CITY இந்த வரிகள் மாநகராட்சி சார்பில் பல இடங்களில் பார்க்க முடிகிறது. இவை கேட்க்க நன்றாகத்தான் இருக்கிறது . ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமானால் பெரும்பாலான பொது இடங்களில் குப்பை தொட்டிகளே இல்லை. குப்பைத் தொட்டியிலே குப்பையைப் போட நினைக்கும் என்னைப் போன்ற சில பொது ஜனங்கள் கூட குப்பைத் தொட்டி இல்லாதபடியால் வீதியிலே போட வேண்டி இருக்கிறது. நமது நாடும் சிங்கப்பூர் ஆக வேண்டுமானால், பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்க வேண்டும். தேவையான அளவு குப்பைத் தொட்டிகளை எங்கும் நிறுவ வேண்டும்.
கோரிக்கை 4 :
மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் .... இவை அரசின் விளம்பர வாசகங்கள். ஆனால் இன்று தமிழ்நாடுதான் மிக வேகமாக மரங்களை அழித்து வருகிறது. ஏற்க்கனவே, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சாலையோர மரங்கள் விரகாகி விட்டன. ரியல் எஸ்டேட் புண்ணியவான்கள், தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களை அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாற்றி விட்டனர். வன விரிவாக்க துறை நன்றாக குறட்டை விட்டுத் தூங்குகிறது. அதன் செயல்பாடுகள் சொல்லும் விதத்தில் இல்லை. எனவே , அரசு தலையிட்டு, மரம் வளர்ப்பு என்பதை தீவிரப்படுத்த வேண்டும். இது உடனடியாக கவனிக்கப் பட வேண்டிய விஷயம்.
இன்னும் பல கோரிக்கைகள் இது போல நெஞ்சில் குமுறிக் கொண்டு இருக்கிறது. எனினும், மேலே கூறியவை உடனடியாக தீர்க்கப் பட வேண்டிய விஷயம் என்பதால் இவைகளை மட்டும் இப்போதைக்கு உங்கள் முன் வைக்கிறேன், உங்களைப் போன்றவர்களால் நல்லது செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் .....

இது ஒரிஜினல், நகல் இல்லை...

இந்த SUN தொலைக்காட்சியின் அட்டகாசம் தாங்கலை சாமி ... எதோ.. MUSIC Channel இவர்களுடைய கண்டுபிடிப்பு மாதிரி நொடிக்கொரு முறை இது ஒரிஜினல், நகல் இல்லை என விளம்பரப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
கலைஞர் தொலைக்காட்சியின் இசையருவியை குறி வைத்து இந்த தாக்குதல் நடக்கிறது.
ஆனால் இவர்கள் VIJAY TV- ல் சுட்ட நிகழ்ச்சிகளை என்ன சொல்வது? முதலில் தன் முதுகில் உள்ள அழுக்கை துடைத்துவிட்டு அடுத்தவர்களை குறை சொல்லட்டும் சன் நிர்வாகம்.

என்ன நான் சொல்றது ????

Thursday, May 29, 2008

சுவையான கடிதம்......

வலைத்தளத்தில் கிடைத்த சுவையான கடிதம்........

Tuesday, May 27, 2008

கொறஞ்ச காசில மருத்துவம்.....

வணக்கமுங்க்னா, இப்ப நாம இருக்கிற நெலமையில, அந்த வலி, இந்த வலி னு அடிக்கடி Doctor கிட்ட போய் பணத்த தொலச்சிடறோம். அட இல்லனா அவிங்களே பிடுங்கிகிறாங்க. என்ன நாஞ் சொல்றது.... அட 50 பைசா ஹால்ஸ் முட்டாய் கணக்குக்கு 500 ரூவா பணத்த உருவிடுறாங்க. அட அதுக்குதான்னா இங்க ஒரு விசயத்தைசொல்லி புடலாம் னு வந்துருக்கிறேனுங்க. அட, கொஞ்சம் காத கொடுத்து தான் கேளுங்களேன்...

சாதரணமா ஒரு காய்ச்சல் , தலைவலி வந்தா நாமளே கடைல போய் எதோ ஒரு கருமத்த அட அதான் கடைக்காரனே தரான்ல அத வாங்கி சாப்பிடுறோம். அது கேட்குதா, இல்லையா ஒரு எளவும் தெரியறதில்ல. ஆனா, Side Effect வேணா நல்லா தெரியுது. கண்ட மருந்த வாங்கி காசைக் கரியாக்கிறதுக்கு பதிலா நான் ஒரு எளிமையான வழி சொல்ரேன் கேட்டுகுங்க்னா...- IMPCOPOS- னு (http://www.impcops.org/index.html) அரசு அமைப்பு இருக்கு. அதில எல்லா வகை சித்தா, ஆயுர்வேதா மருந்துகள் மிக குறைவான விலையில்

தராங்க. இந்த அமைப்புல பதிவு பண்ணின மருத்துவர்கள் நிறைய இருக்காங்க. இங்க வாங்குற மருந்தும் விலை குறைச்சல். அது மட்டுமில்ல... நல்லா கேட்க்கவும் செய்யுது. அதான் மேட்டரு... இதே மருந்த சில தொலைக்காட்சி புகழ் மூணு, நாலு மடங்கு அதிகம் வச்சி விக்குறாங்க. அதனால நான் இன்னா சொல்ரேன்னா... சொம்மா... சொம்மா... மருந்து வாங்காம உருப்படியா IMCOPS பதிவு செஞ்ச டாக்டர பார்த்து அருமையான மருந்த கொறஞ்ச வெலயில வாங்கி சாப்பிட்டு உடம்ப தேத்து.. இந்த (http://www.impcops.org/index.html )வெப் சைட் ல எல்லா தகவலும் இருக்கு.


Friday, May 23, 2008

நெல்லையப்பர்...






திருநெல்வேலிக்கு அலுவல் நிமித்தம் சென்றபோது புகழ் வாய்ந்த நெல்லையப்பர் கோவிலை எப்படியும் காண விரும்பி நானும் என் நண்பரும் இரு சக்கர வாகனத்தில் ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை கிளம்பினோம். ஏனோ தெரியவில்லை... திருநெல்வேலி பிடித்த ஊராகி விட்டது. கோவில் செல்லும் வழி ரம்மியமாக இருந்தது. ஏற்கனவே, திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி பக்கம் எல்லாம் கோவில்களை பார்த்து ரசித்து (சாமியும் கும்பிட்டேனுங்க்னா) இருந்த படியால் கோவிலின் அழகை மிகவும் ரசித்தேன். அதன் பிரம்மாண்டம் மிக அழகு. மிகவும் பழமை வாய்ந்த கோவில் என்பதும் இதன் சிறப்பு ( சுமார் 1500 வருடங்கள் பழமை வாய்ந்தது). இங்கு இறைவன் சுயம்பு வடிவானவர். எனக்கு ஒரு பழக்கம். இது போல பழைய புகழ் பெற்ற ஸ்தலங்களுக்கு சென்றால் அதன் வரலாற்றை கேட்டு விடுவது வழக்கம். அங்கு இருந்த அர்ச்சகரிடம் கேட்ட போது அழகாக சொன்னார். ஒரு காலத்தில் அரண்மனைக்கு பால் கொண்டு செல்லும்போது இந்த ஸ்தலம் இருந்த இடத்தில் மூங்கில் மரங்கள் நிறைந்து இருந்த போது அந்த வழியே செல்லும் இடையர்கள் வைத்திருந்த மண் பானையில் பால் குறிப்பிட்ட இடத்தில் வழக்கமாக சிந்தியது. தினமும் பால் குறைவதைக் கண்ட மன்னன் அதற்கான காரணத்தைக் கண்டு அந்த மூங்கில் மரத்தை வெட்ட உத்தரவிட்டான். அதை வெட்டும்போது மரத்திலிருந்து ரத்தம் கொட்டியது. அங்கு மன்னன் வந்து அந்த அதிசயத்தைக் காணும் போது இறைவன் சுயம்புவாக தோன்றி மன்னனுக்கு காட்சி அளித்தான். மூங்கில் மரத்தை வெட்டியதால் ஏற்ப்பட்ட சேதம் காரணமாக சுயம்பு லிங்கத்தில் ஒரு பகுதி சேதத்துடன் காணப் படுகிறது. அங்கு கோவில் எழுப்பி இறைவழிபாடு நடத்தினான் மன்னன்.
சரி, திருநெல்வேலி என பேர் வந்தது எப்படி தெரியுமா????

அந்த இறைவனுக்கு அந்தனர் ஒருவர் தினசரி நெல்லை கொண்டு அமுது படைத்து இறை வழிபாடு நடத்தி வந்தார். ஒரு நாள் ஈர நெல்லை காய வைத்து விட்டு தாமிர பரணி ஆற்றில் குளித்து விட்டு வர சென்றார். அப்போது திடீரென மழை வந்து விட்டது. அந்தனர் ஐயோ, இறைவனுக்கு இன்று அமுது படைத்து வழிபட முடியாமல் போய் விடுமோ என்று அலறி அடித்து கோவிலுக்கு ஓடினார். அங்கு என்ன நடந்தது தெரியுமா? காய்ந்து கொண்டிருந்த நெல் இருந்த இடத்தில் நன்கு வெயில் அடித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் மழை பெய்து கொண்டிருந்தது. நெல்நனையாமல் வேலி அமைத்து காத்த படியால் இறைவனுக்கு நெல் வேலி காத்தவர் என்றுபெயர் வந்தது. அதனுடன் திரு என்ற அடைமொழி சேர்ந்து திருநெல்வேலி என்று ஆயிற்று.
ஸ்ஸ்ஸ் அப்பாடி மூச்சு வாங்குது... நல்ல கலைஅம்சங்களுடன் கோவில் விரிந்து கிடக்கிறது. அங்கு காந்திமதி அம்பாள் சன்னதியும் இருக்கிறது. அதைப் பற்றி அங்கிருந்த அர்ச்சகரிடம் கேட்டபோது ஒரே வரியில் சொல்லி விட்டார் .... என்ன தெரியுமா ??? நெல்லையப்பர் - சுயம்பு வடிவம் . காந்திமதி அம்பாள் - சக்தி வடிவம். மேற்கொண்டு எதையும் சொல்ல விரும்பாமல் அவர் முடித்துக் கொண்டார். எல்லாரும் காண வேண்டிய கோயில் .....

யோசிக்க வேண்டிய நேரம்....

நமது வேலைக்கு இடையே நம்மை ரிலாக்ஸ் செய்ய நாம் என்ன செய்கிறோம்? யோசித்துப் பார்த்தால் இசை, திரைப்படம், கேம்ஸ் இவைகளைத் தாண்டி வேறு என்ன செய்கிறோம் என்றால் கிடைக்கும் பதில்அனேகமாக ஒன்றுமே இருக்காது. அதுவும் நகர வாழ்வில் நாம் டிஸ்கோதே, பார்ட்டி தவிர வேறு எதை பற்றியும் நினைப்பதே இல்லை.


இயற்க்கையை தரிசிக்க வருஷம் ஒருமுறை (Tour) நினைக்கிறோம். சிலருக்கு மட்டுமே அது முடிகிறது. அட நமது வீட்டின் மாடியில் நின்று கொண்டு பால் நிலவை ரசிக்க கூட நேரம் இல்லாமல் தொலைக்காட்சிகளில் மூழ்கி கிடக்கிறோம். சிறு பிள்ளைகள் கூட அவர்களுக்கேயான குறும்புகளை தொலைத்து விட்டு பெரிய மனிதர்கள் போல நடக்க நினைக்கிறார்கள். சூழ்நிலை அவர்களையும் விட்டு வைக்க வில்லை. அல்லது நாமே அது மாதிரியான சூழலை உருவாக்கி விட்டோம். Digital Experience என்று சொல்கிறோமே அதே போல நமது வாழ்வும் Digital Life ஆக மாறி விட்டது. TV & Media வின் ஆதிக்கம் நம் மேல் பலமாக திரை போல விழுந்து இருக்கிறது. நமது அடுத்த தலை முறை எங்கே செல்கிறது. அதை நாம் எங்கே அழைத்து செல்லப் போகிறோம் ?

இது யோசிக்க வேண்டிய நேரம். யோசியுங்கள்....

Tuesday, May 13, 2008

HCL Mileap Ultra Portable Leaptops!

HCL -ன் புதிய MiLeap Model Laptops ...

HCL நிறுவனம் புதிய தயாரிப்பாக MiLeap Series - Ultra Portable Laptop - கணினிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மிகவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இவைகள் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ருபாய் 16,990/- முதல் இவ்வகை மடி கணினிகள் கிடைக்கின்றன. 31,990/- என மதிப்பிடுள்ள மற்றொரு model-ல் அனைத்து சிறப்பம்சங்களும் உள்ளன. Intel Processor / Intel 945GU Chipset / 1GB DDR2/80GB HDD/ 1.3MP Camera / INTEGRATED Bluetooth & Wi-fi/ 7" Touch screen with swivel type screen உடன் வரும் இந்த மாடல் உடைய எடை எவ்வளவு தெரியுமா ? வெறும் 980Gram மட்டுமே. மாணவர்கள், Insurance Agents, அலுவலகம் செல்பவர்கள், அடிக்கடி பிரயாணம் செல்பவர்களுக்கு மிகவும் ஏற்ற Model. --- என் மனசு.

Monday, May 12, 2008

பென் ஹர் --- ஹாலிவுட் அலசல்




சமீபத்தில் பென் ஹர் (BEN-HUR) படம் பார்க்க நேர்ந்தது. தமிழ் மொழி மாற்று படம் என்பதால் மிகவும் ரசிக்க முடிந்தது. இரு நண்பர்களுக்கு இடையேயான நட்பையும், துரோகத்தையும் அழகாக வெளிக் காட்டுகிறது இப்படம். இயேசு கிறிஸ்து பிறப்பும், இறப்பும் படத்தின் ஆரம்பமும், முடிவுமாக காண்பிக்கப்படுகிறது. என்றாலும், இது நண்பர்களை பற்றியும் அவர் குடும்பத்தைப் பற்றியும் சுழன்று வருகிறது கதை. பழங்கால வாழ்வின் சிரமத்தையும், அடிமை வாழ்வையும் அழகாக காண்பிக்கிறது இப்படம். பென் ஹர் தான் இப்படத்தில் நாயகன். அவருடைய காதலியாக நடித்தவர் நடிப்பில் தூள் கிளப்பி உள்ளார். -- பார்க்க வேண்டிய படம்.

Saturday, May 10, 2008

ஸ்ரீரங்கநாதர்...


ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில்

புகழ் பெற்ற வைணவ தலமான ஸ்ரீரங்கம் ( Srirangam) ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் திருச்சி நகரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஸ்ரீ ரங்கம் கோயில் விமானமானது திருப்பாற்கடலின்று தோன்றியது. இதை நெடுங்காலமாக பூசித்து வந்த பிரம்மதேவன் திருவரங்கநாதருக்கு நித்திய பூசை புரிந்து வரும்படிசூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித்தோன்றலான இராமபிரான் அயோத்தியில் வழிபட்டு வருகிறார். தனது முடிசூட்டு விழாவினைக் காண வந்த விபீஷணனுக்கு தான் பூஜித்து வந்த இவ்விமானத்தை அளித்தார்.

அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் விபீஷணன் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்து விட்டு திரும்ப எடுக்கும் போது தரையை விட்டு வரவில்லை. அது கண்டு கலங்கிய விபீஷணனை அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான்.அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார்.விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர் தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டருள்வதாக உறுதி அளித்தார்.பின்னர் தர்மவர்ம சோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டான்.அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்து போக தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிøல் சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.

Saturday, April 12, 2008

திரு நாள் வாழ்த்து

தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய சித்திரை திரு நாள் வாழ்த்துக்கள்.

Monday, March 31, 2008

ஆரோக்கிய அட்வைஸ்..

அட்வைஸ் பண்றது ரொம்ப ஈஸி.... அதான் கொஞ்சம் நம்ம தமிழ் வலைப் பூக்கள் வாசகர்களுக்காக ஆரோக்கிய அட்வைஸ்..
WATER THEROPHY
நிறைய தண்ணீர் அருந்துவது அரோக்கியமானது என்று நாம் கேட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம். ஆனால் சரியான முறையில் தண்ணீர் அருந்தாவிட்டால் அப்படியே எதிர் மறை விளைவுகளை ஏற்படுத்தும். சரி, எப்படித்தான் குடிக்கலாம்? காலை எழுந்தவுடன், முதல் ஆகாரம் தண்ணீர்தான். முதலில் ஒரு வாரத்திற்க்கு ஒரு தம்ளர் மட்டும் குடிக்கவேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீரின் அளவை அதிகரிக்க வேண்டும்.
இதனால் என்ன பயன் தெரியுமா? வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் சரியாகும். மலச்சிக்கல் தீரும். வயிற்று வலி, வாயுத்தொல்லை, உடல் உஷ்ணம் இவை எல்லாம் சரியாகும். (லேகியம் விற்பவன் போல மாறி விட்டான் என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்க்கிறது) சரி வேறு எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும்? உணவு உண்ணும் முன்பு கால் டம்ளர் மட்டும் (வயிற்றை நனைக்க) குடிக்கவும். பிறகு சாப்பிட்ட பின்புதான் மீண்டும் நீர் குடிக்க வேண்டும். ஒரு நாளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒரு டம்ளர் வீதம் அதிக பட்சம் 2-3 லிட்டர் வரை குடிக்கலாம். எப்பவுமே நம்ம ஆட்கள் கொஞ்சம் ஒவர் புத்திசாலி... சில பேர், ஒரே தடவையில் ஒரு லிட்டர் வரை குடிக்க முயல்வார்கள்.இதானால் கோமா ஸ்டேஜ் வரை கூட போக வாய்ப்புண்டு. எனவே சரியான அளவில் தண்ணீர் (அந்த தண்ணீ இல்லை) அருந்தி ஆரோக்கியமாக வாழுங்கள்.

Saturday, March 29, 2008

அகிலனின் - கனவுகளின் தொலைவு

கனவுகளின் தொலைவு http://agiilankanavu.blogspot.com/ வலைத் தளத்தை ஒருமுறை தரிசித்து பாருங்கள். கீழே காணும் கவிதை பிரியம் என்ற தலைப்பில் திரு. அகிலன் எழுதியது. வாசித்துப் பாருங்கள்... மிக அருமை...
பிரியம்
அவள் அழைத்துப்போன
கனவின் பசிய நிலத்தில்
வானவில்லின்
வர்ணங்களைக்கொண்ட
பறவையின் பாடல்
வழிந்து கொண்டிருந்தது திசையெங்கும்.
பாடலின்திசைகளில்
நான் கிறங்கிய கணத்தில்
சடுதியாய் நீங்கிப்போனாள்
கூடவே போயிற்று
அவளது நிலமும்
வானவில் பறவையும்.
நான் அலைந்துகொண்டிருக்கிறேன்.
அந்த கனவுக்குள்
மறுபடியும் நுழையும்
திசைகளைத் தேடி.
நன்றி : அகிலன்.

புலம்பல்

மானுடம் புலம்பியது
இது என்ன மழை , விடவே மாட்டேங்குதே !
ஒரு நல்லது கெட்டதுக்கு போக முடியுதா ??
சளி , காய்ச்சல் வேற வாட்டுது ..
சனியன் பிடித்த மழை எப்போதான் விடுமோ ???
மற்றொரு முறை அதே மானுடம் புலம்பியது ...
என்ன வெயில்...
என்ன கொடும சார் .... தாங்கவே முடியல...
மழை வேற வரவே மாட்டேங்குது ...
அனல் வாட்டுது... ஒரு மழை பெஞ்சா எப்படி இருக்கும்!
ஷ்ஷ்ஷ் ... அப்பாடி.......
இதுதான் உலகம்.... இதுதான் வாழ்க்கை....

Tuesday, March 18, 2008

அனுமதி!

என் கனவுகளைக் கூற
என்னை அனுமதி!
உன் கன்னங்களை
வெட்க்கத்தால் சிவக்க வைக்கிறேன்!! -- என் மனசு

மழைக் காலம்


இன்னும் மழை நிற்க்க வில்லை. அதுதான் மழைக் கவிதை தொடர்கிறது.

மழைக் காலங்களின்
மண் வாசனை எப்போதும்
மனதைக் கிறங்கடிக்கும்.

நனைந்து போன
சாலைகளின் ஒரங்களில்
புதுக்குடைகளாய் காளான்கள்
கம்பீரம் காட்டும்.

புல்வெளிகளின் புதிய
பச்சை நிறமும், பெயர் தெரியாத
காட்டுப் பூக்களின் நறுமணமும்
மனதை வருடும்.

எப்போதோ, யாராலோ
பயன்படுத்தப்பட்ட,
அனேகமாய் அடையாளம் இழந்த
ஒற்றையடிப் பாதைகள்
கவனம் ஈர்க்கும்.

கிளர்ச்சியடைந்த
காட்டுக்குயில்களின் கான இசை
இதயம் தொலைக்கும்.
புது நீர் தாங்கும்
குளங்கள் - அதில்
உயிர்களை நிரப்பும்.

ஆயிரம் அர்த்தம் சொல்லும்
அழகிய மழைக்காலமே! - உன்
ஒவ்வொரு வருகையிலும்
என் வயதைப் புதைத்து,
மனசைத் தொலைக்கிறேன்.

-- என் மனசு

Saturday, March 15, 2008

இப்படிக்கு ROSE

இரண்டு நாட்கள்ளுக்கு முன்பு VIJAY TV இல் ஒளிபரப்பான இப்படிக்கு ROSE TV SHOW பல அதிர்வுகளை சின்னத் திரையில் ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் குறிப்பாக பாலியல் தொழிலாளர்களை களம் இறக்கி பல முக்கியமான விவாதங்களை முன் வைத்து இருக்கிறது. இரண்டு பாலியல் தொழிலாளர்கள் மற்றும் எழுத்தாளர் சாருநிவேதிதா கலந்து விவாதித்தது மிகவும் உருப்படியாக இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குஷ்பு வை அவரது சொந்த கருத்துக்காக கடுமையாக விமர்சித்த கட்சிகள் இந்த ஒளிபரப்பை பார்த்திருந்தால் வாழ்க்கையின் நிதர்சனங்களை உணர்ந்து வாய் பேசா மௌனி ஆகி இருந்து இருப்பார்கள். நிஜ வாழ்வின் உண்மைகளை, பல ஆண்களின் பொய் முகங்களை, இன்றைய நாட்டின் நிலைமையை அப்பட்டமாக வெளிப்படித்தியது . இனி இதைப் போல பல விவாதங்கள் இன்னும் பல நடை பெற வேண்டிய அவசியத்தையும் இது உணர்த்துகிறது. நீங்கள் யாரேனும் இந்நிகழ்ச்சியை பார்த்தீர்களா?

Friday, March 14, 2008

தண்ணி மாமே! தண்ணி !!


எப்படித் தான் இப்படி ஒட்டுறான் களோ ....
தண்ணி அடிச்சி இருப்பானோ ?
ஹி....ஹி...

இதுதான் SMOKE ANGELS ....

காதல் அழிவதில்லை...


இதுவும் கவித தான்... அட சும்மா அதுவா வருதுங் னா .....


மழைக் காலம்


கடந்த சில நாட்களாக மழை பெய்வதால், அவ்வப்போது சில கவிதைகள் (கவித மாதிரி..) மனசுக்குள் எட்டிப் பார்க்கிறது ( அதுவா வருது தலைவா.... ஹி..... ஹி...). அப்படி விழுந்த சிலவற்றுள் இதுவும் ஒன்று.








Wednesday, March 12, 2008

மழை!

அவள் கோலமிட

வாசல் தெளித்தது

மழை...

Saturday, March 8, 2008

திருச்சி மலைக் கோட்டை

கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம், கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். ஆனால் நமது ஊரில் கோவில்களின் நிலை எப்படி இருக்கிறது? அதை நாம் எப்படி பரமரிக்கிறோம் என்றால், நம்மில் பலருடைய பதில் மௌனமே! நம்மில் பலர்
கோவில்களை அசுத்தப்படுதுவதைப் பற்றி துளியும் மனக்கிலேசம் கொள்வதில்லை. தூய்மையான கோவில்கள் மிக அரிதாகிப் போய் விட்டது. திருச்சியில் உள்ள ஐயப்பன் கோவில் தான் நான் பார்த்தவைகளில் மிக நல்ல முறையில் பராமரிக்கப் படுகிறது. நிறைய கோவில்களில் கரி மற்றும் எண்ணெய் கொண்டு அவரவருக்கு பிடித்த பெயர்களை, வாகன எண்களை கோவில் பிரகார சுவர்களில் கிறுக்கி சுவரை அசிங்கப் படுத்தி இருப்பார்கள். திருச்சி மலைக் கோட்டை கோவிலும் அதற்கு விதி விலக்கல்ல. கோவில் படி ஏறும்போது கோவில் வரலாறை விளக்கி வைக்கப் பட்ட டிஜிட்டல் பேனர் களில் ஒரு துளி டம் இல்லாமல் பேனாவால் கிறுக்கி வைக்கப் பட்டு வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளை மிகவும் முகம் சுளிக்க வைக்கிறது ( பார்க்க படம் ). மேலும், ஸ்ரீரங்கம் கோவிலை குப்பை கூளம்ஆக்கி விட்டார்கள். எங்கு பார்த்தாலும் குப்பைகள், பிளாஸ்டிக் பேப்பர் , எச்சில் இவைகளால் நிறைந்து இருக்கிறது. திருச்சியைப் பொறுத்த வரை மலைக் கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் கோவில்கள் தான்
வெளி நாட்டுப் பயணிகள் மிகவும் வந்து போகும் இடங்களில் ஒன்று மற்றும் நமது பாரம்பரிய சின்னங்களில் ஒன்று. அதை நமது தலைமுறை காப்பாற்ற வேண்டியது கடமை. புதியது செய்யாவிடினும் இருப்பதை அழிக்காமல் இருப்பது நலம். எப்போது அதை நாம் உணர்வது ????

Friday, March 7, 2008

பாசக்கார பய...

சமீபத்தில் ஒரு இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட போது கண்ட காட்சி, அந்த இறந்து போன நபர் ஆசையாக வளர்த்த நாய் அவரது மறைவின் போது அருகிலிருந்த வீட்டின் கொல்லைப் புறம் கட்டப்பட்டிருந்தது. எல்லோரும் அவரது மறைவின் காரணம் துக்கப்பட்டு இருந்ததால் இரண்டு நாட்களாக அந்த நாயை யாரும் கண்டு கொள்ளவே இல்லை. பாவம் சாப்பாடு போடக் கூட மறந்து விட்டார்கள். அந்த நாய் தன்னை யாரும் கண்டு கொள்ள வில்லையே என்று அங்குமிங்கும் அலை மோதியது. தன்னுடைய எசமானன் எங்கே என்று தேடியது, தவித்தது. தனக்கு ஒருபோதும் இப்படி ஆனதில்லையே என்று அந்த பாசக்கார ஜந்து பரிதவித்தது. மூன்றாம் நாள் காலை அந்த இறந்து போனவரின் மகள் நியாபகம் வந்தவளாக ஓடோடி வந்து, நாயை அவிழ்த்து தனது வீட்டிற்க்கு எடுத்துச் சென்றாள். அவளைக் கண்டவுடன் அந்த நாய் வாலை ஆட்டியபடி பாசத்துடன் அவளிடம் தாவிச் சென்றது. இப்போதும் அந்த நாய் அந்த வீட்டு வாசலில் கட்டப் பட்டிருக்கிறது. சாலையில் செல்லும் ஒவ்வொருவரையும் பார்த்தபடி தன் எசமானன் இதோ வந்து விடுவான், தன்னை அவன் மடியில் வைத்து கொஞ்சுவான் என்று எதிர் பார்ப்புடன் காத்திருக்கிறது...
-- இன்னும் எழுவோம்ல...

Thursday, February 28, 2008

பயணம்....

நாம் எல்லோரும், எப்போதும், எங்காவது எதோ ஒரு காரணத்திற்காக பயணப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் ஒவ்வொருவரின் பயணமும் அதற்கான காரணமும் வேறு வேறானவை. விருப்பப் பயணம், கட்டாயப் பயணம், திட்டமிடா பயணம், திட்டமிட்டும் திசை மாறிய பயணம் என பல்வேறு அனுபவங்கள் நம் எல்லாருக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால் நாம் எல்லா பயணங்களையும் சுகமாக அனுபவித்து இருக்கிறோமா என்றால் அது நிச்சயம் இல்லை என்பதே பதிலாக நம்மில் எல்லாரிடமும் இருக்கும்.
எனது பள்ளிப் பருவத்தில் பேருந்தில் பயணம் செய்வது எனக்கு ரொம்ப பிடித்தமானதாக இருந்தது. அதுவும் ஜன்னலோர இருக்கை கிடைக்கும் பட்சத்தில் அந்த பயணம் ரொம்ப அலாதியானது. அப்போதெல்லாம் சாலையோரம் நிறைய மரங்கள் இருக்கும். பயணக் களைப்பே தெரியாது. ஆனால் இன்றைய நிலைமை ரொம்பக் கொடுமை. அட ஒரு மரத்தைக் கூட கண்ணில் பார்க்க முடிவதில்லை. எல்லாம் வெட்டி சாய்க்கப் பட்டு விட்டது. வெயிலின் உஷ்ணம் வாகனம் முழுதும் நிரம்புகிறது. அப்போதெல்லாம் இரவு நேரப் பயணங்கள் ரொம்பவும் சுகமானது. பால் நிலா பேருந்தைப் பின் தொடர்ந்து வர மரங்கள் ஒவ்வொன்றாக கடக்கையில் மனதில் கவிதை ஊற்று எடுக்கும், இலகுவாகும். ஆனால் அதெல்லாம் இப்போது வெறும் கனவாகப் போய் விட்டது. நடந்து செல்பவனை இரு சக்கர வாகனத்தில் செல்பவன் மதிப்பதில்லை. இரு சக்கர வாகனத்தில் செல்பவனை எவனும் மதிப்பதில்லை. முக்கியமாக தண்ணீர் லாரி களும் , அரசுபேருந்துகளும் எதோ அவர்கள் ரோடு போலத்தான் செல்கிறார்கள். யம கிங்கிரர்களும் அவர்கள் தான்.
உங்களில் யாராவது பால் நிலா பின்னணியில், மரங்கள் கடக்க, வசந்த காலத்தில், இரவு நேரத்தில், சமீபத்தில் பேருந்தில் பயணம் செய்து இருக்கிறீர்களா?
-- இன்னும் எழுதுவோம் ல ........

Saturday, February 23, 2008

சில பழக்கங்களும், அதற்க்கான காரணங்களும் :

நம்மிடையே நிலவி வரும் / வந்த சில பழக்க வழக்கங்களும், அதற்கான உண்மையான காரணங்களும் பற்றி சிந்தித்தபோது உதித்தவை இவை:
நொறுங்க தின்றால் நூறு வயது வாழலாம்:
அட அட .. இந்த பழமொழி சொன்னவன் விளக்கமாக சொல்லாமல் போய் விட்டான். இதை மட்டும் நம்ம ஆட்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அடித்து நொறுக்குகிறார்கள்.
ஆனால் உண்மையில் நாம் சாப்பிடும் உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்பதே உண்மையான தத்துவம்.
இரவில் தயிர் சாப்பிடக்கூடாது:
இரவில் தயிர் அருந்துவதால் செரிமானம் பாதிக்கப் படுவதால் அறிவியல் ரீதியாகவே அதை இரவில் தவிர்ப்பது நல்லது.
சாணம் தெளிப்பது:
சாணம் ஒரு நல்ல கிருமி நாசினி. அதை தெளிப்பதால் வீட்டினுள் கிருமிகளின் வரவு தவிர்க்கப்படுகிறது மற்றும் அது தரையை கெட்டிப்படுதுவதுடன் புழுதி வராமலும் காக்கிறது.
இரவில் உண்ணாதே:
அந்த காலங்களில் எல்லோரும் இரவு ஏழு மணிக்கு முன்பே உணவு அருந்தி விடுவர். அப்போதெல்லாம் விளக்கு வெளிச்சம் குறைவு என்பதால் இந்த ஏற்பாடு. போதிய வெளிச்சம் இல்லாமல் உணவு உண்ணும்போது பூச்சிகள், பல்லி உணவில் கலக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இப்போது அந்தக் கவலை இல்லை. எனவே அந்த அறிவுரை இந்தக் காலத்திற்கு உதவாது.
---- இன்னும் எழுதுவோம்.

மயிலும்.. கிளியும்..

Wednesday, February 20, 2008

அவள்!

அந்த ஆறு
ஆரவாரமாகத்தான்
ஒடிகொண்டிருந்தது - அதனுடன்
அவள் சிரிப்பலைகளையும் சேர்த்து...
----- அவள்
எனக்கு ஆற்றில் தான்
அறிமுகமானாள் - அவள்
தனது துணிகளைத்தான்
துவைத்துக் கொண்டிருந்தாள் - ஏனோ!
என் மனசுதான்
அழுக்காகிப் போனது.
நாட்கள் நகர்ந்தன...
பார்வைப் பரிமாறல்கள்
தொடர்ந்தன.. - என்னுள்
ஆற்றங்கரையே சகலமும் ஆயிற்று.
வசந்தமும் கழிந்தது, -ஏனோ
சில நாட்களாய்
அவள் வருவதேயில்லை
அவளுக்காக கத்திருந்து
கண்களில் காளான்
பூத்துதான் போனது.
எதிர்க் கரைகள் கூட
எனக்காக இரகசியமாக அழுதன.
கரையோரமாக அவளின் அழியாத
காலடித் தடங்களை
இன்னமும் தேடிக்கொண்டுதானிருக்கிறேன்.
அந்த ஆறு
இன்னமும் ஒடிக்கொண்டுதானிருக்கிறது
-ஆனால்
சலனமின்றி, அமைதியாக....
-- 'என் மனசு'

கனவிலாவது...

என் புன்னகையைப்
பறித்துக் கொண்டு
கண்ணீரை மட்டும்
விட்டுச் சென்ற -என்
கனவுக் காதலியே! - நீ
கண்ணீரை மட்டுமா
விட்டுச் சென்றாய்... -ஆழகிய
கனவுகளையும் அல்லவா
விட்டுச் சென்றாய்...
விடியலைத் தேடும் - என்
வாழ்க்கையில் கண நேரம்
மின் மினியாய் மின்னி மறைந்தவளே!
என் கண்ணீர் கூட
காய்ந்து விடும்- ஆனால்
உன் நினைவுகள்
என்றும் காயாதடி!!
என் மனசுக்குள் கொலுசாய்
உன் நினைவுகள்
என்றும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
அடி என் கனவுக் காதலியே! - என்னை
கனவிலாவது காதலித்துவிடடி!!
-- 'என் மனசு'

முரண்

என் எதிர் வீட்டு சுவரில்
எழுதியிருந்தார்கள்
"சுவரில் எழுதாதே"
-- 'என் மனசு'

Monday, February 18, 2008

நாயன சத்தம் (ஒரு உயிரின் குரல்)

ஒரு ஞாயிறு மதியம் வீட்டில் அமர்ந்து TV பார்த்துக்கொண்டிருந்தபோது, TV ஒலியையும் மீறி அந்த நாயன சத்தம் தெருவிலிருந்து கேட்டது. அன்று முகூர்த்தநாள் என்பதால் ஏதேனும் மாப்பிள்ளை அழைப்பாக இருக்கும் என நினைத்து மீண்டும் தொலைக்காட்சியில் மூழ்கினேன். ஆனால் ஒற்றை நாயனமாக அந்த ஒலி விட்டு விட்டு கேட்கவே சாளரம் வழியே எட்டிப் பார்த்தேன். கந்தல் துணியுடன் 50 வயதுடைய ஒருவர் ஒவ்வொரு வீட்டு முன்பும் நின்றபடி ஒற்றை நாயனத்தை மிக அருமையாக வாசித்தபடி பிச்சை கேட்டுக்கொண்டிருந்தார். முன் நாட்களில் அவர் ஒரு அருமையான வாத்தியக் கலைஞர் ஆக இருந்திருக்க வேண்டும். திருவிழாக்களில் கண்டிப்பாக அவர் வாசித்திருக்கக் கூடும். அந்த அளவு இசை மிக நேர்த்தியாக இருந்தது. காலம் அவரை எப்படி மாற்றி விட்டது....அவரை மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ கலைஞர்களை இப்படித்தான் மாற்றி விட்டிருக்கிறது. மெல்லத் தமிழ் இனி சாகும் என்றான் கவிஞன். ஆனால் இன்று கிராமியக் கலையும் அழிந்து கொண்டிருக்கிறது. அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் தொலைந்து விட்டது. ஒரு வேளை உணவுக்காக பிச்சை எடுப்பதைத் தவிர வேறு வழி இல்லாமல் கற்ற கலையையும் வீதியில் இறக்கியாயிற்று. கனத்த மனதுடன் கொஞ்சம் சில்லரைகளை அவரிடம் அளித்தேன். அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் அனேகமாக அனைவரும் வீட்டினுள், தொலைக்காட்சியில் மூழ்கியிருந்தனர். ஒரு வீட்டில் அவரை அடித்து விரட்டாத குறைதான். வசவுகள் வேறு..இன்னும் பல வீடுகளில்அவரை கண்டு கொள்ளவே இல்லை.
இதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன்பு ஒரு மதிய வேளையில் இவரைப் போலவே மற்றொறு கலைஞர் இதே வீதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவரது நிலை இன்னும் பரிதாபம். பணத்தைக் கொண்டு வருவதற்குள் அவர் வீதியைத் தாண்டி விட்டிருந்தார். இவர்களைக் காணும்போது மனது வலிக்கிறது. திரு.S.ராமகிருஷ்ணன் ஒரு நூலில் குறிப்பிட்டிருந்தார், தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு இசைக் கலைஞர் (கோவில்களில் வாசித்துக்கொண்டிருந்தவர்) இன்று ஏதோ ஒரு நெடுஞ்சாலை உணவகம் ஒன்றில் சாம்பார் ஊற்றிக் கொண்டிருக்கிறார் என்று. காலம் மிக விசித்திரமானது....
........நீங்கள் இசைக்கலைஞர்கள் யாரையேனும் பார்க்க நேர்ந்தால், தயவு செய்து உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள். அது நீங்கள் இசைக்கலைஞர்களுக்கு செய்யும் உதவி மட்டும் இல்லை, அழிந்து கொண்டிருக்கும் இசைக்கும் செய்யும் உதவியுமாகும்.
---------------------'என் மனசு' -- இன்னும் விரியும்...

Friday, February 15, 2008

கதை சொல்லிகள்...

அநேகமாக எல்லாருக்கும் கதை கேட்கப் பிடிக்கும். ஒவ்வொரும் கதை சொல்லும் விதத்தில் கதையின் சுவை கூடும் அல்லது குறையும். ருஷ்யக் கதாசிரியர் 'சிங்கிஸ் ஐத்மாத்தவின்' கதை சொல்லும் பாங்கே அலாதியானது. ஒரு முறை, தான் சிறுவனாக இருந்தபோது நடந்த சுவையான சம்பவங்களை தன் மகன் நோய்வாய் பட்ட தருணத்தில், படுத்த படுக்கையாக இருந்தபோது அவர் சொல்லிய கதைகள் 'அப்பா சிறுவனாக இருந்தபோது' என்ற தலைப்பில் வெளி வந்து பெரும் வரவேற்பை பெற்றது. அவர் கதை சொன்ன பாங்கில் இன்று வரை யாரும் கதை சொல்லவே இல்லை. ஒரு குதிரையின் வாழ்க்கையை 'குல்சாரி' மூலம் அருமையாக, கண்ணீர் மல்க வெளிப்படுத்தியிருப்பார்.

காலம் மிதமிஞ்சிய வேகத்தில் சென்று கொண்டே இருக்கிறது. வாழ்க்கையை அதன் போக்கில் விட்டவர்கள் அதன் ஒட்டத்தினூடே அடித்துச்செல்லப்படுகிறார்கள். எங்கும் கண்ணுக்கெட்டிய வரை ஒரே போல் பனி படர்ந்த 'ஸ்தெப்பி வெளி'... முடிவில்லாத சாலைகள்....பழங்காலத்துக் கோட்டைகள்...இவை யாவற்றிலும் காலம் உறைந்திருக்கிறது. பல கதைகள் உறைந்திருக்கின்றன.

என் மனசு பக்கங்கள்.....

தனக்கென தனி வாசகர் வட்டத்தை வைத்திருக்கும் திரு.S.ராமகிருஷ்னன் அவர்களுக்கு என் முதல் வணக்கம். எனது பயனத்தையும் அவரிடமிருந்தே தொடர்கிறேன். வாசிப்பில் ருசி கண்ட எனக்கு எழுதவும் ருசிப்படுத்தியது அவர் எழுத்து...

மனசு.....
மனசு என்பது என்ன??? பொருளா?... இல்லை உணர்வா?....

மனசு ஒரு ஆச்சர்யப்படத்தக்க விசயம்...அதை மாயக் கண்ணாடி அல்லது மாயக் குதிரை என்பார்கள். உலகிலேயே அதி வேகமானது மனசுதான். ஜப்பானில் இருந்து ஷண நேரத்தில் மனக்குதிரையில் இலங்கா செல்லலாம். விநாயகர், சிவன்-பார்வதியை சுற்றி வந்து பழம் வாங்கியதற்கு பதிலாக இன்னும் வேகமாக மனக்குதிரையில் சுற்றி வந்து பழம் வாங்கியிருக்கலாம்.

குதிரைக்கு கடிவாளம் போடுவது போல மனதினை கடிவாளமிட்டவன் வாழ்க்கையை வெற்றி கொள்கிறான். மனதினை கடிவாளம் போடாதவன் மங்கையிடமோ இல்லை மதுவிடமோ சரணாகதி அடைகிறான். நமது தேடல்கள் எல்லாம் மனதின் தேடல்களே......தேடல்களின் வெளிப்பாடே திரு.S.ராமகிருஷ்னன் போன்றோர்.

ஒரு பழத்தில் நூற்றுக்கணக்கான விருட்சங்கள் மறைந்திருந்தாலும் தேடலில் வெற்றி பெற்றவையே முளை விடுகின்றன...ராமகிருஷ்னன்களாகின்றன...

இங்கே எனது மனக் குதிரையை முடிந்த மட்டும் தட்டுகிறேன். அவை ஒடும் வரை ஒடட்டும்...

Friday, January 11, 2008

காயம்...


மலரே!
உன் இதழ் மூடீயதால்
காயம்
உன் இதழூக்கு மட்டுமல்ல....
ஏனோ பாவம்
என் இதயத்துக்கும்தான்!!!

மலர்

வீழ்வதற்குள்
வாழ்ந்து விடுகிறேனே! ...உன்
கூந்த‌லில் பூவாய்...