பக்கங்கள்

Thursday, February 28, 2008

பயணம்....

நாம் எல்லோரும், எப்போதும், எங்காவது எதோ ஒரு காரணத்திற்காக பயணப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் ஒவ்வொருவரின் பயணமும் அதற்கான காரணமும் வேறு வேறானவை. விருப்பப் பயணம், கட்டாயப் பயணம், திட்டமிடா பயணம், திட்டமிட்டும் திசை மாறிய பயணம் என பல்வேறு அனுபவங்கள் நம் எல்லாருக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால் நாம் எல்லா பயணங்களையும் சுகமாக அனுபவித்து இருக்கிறோமா என்றால் அது நிச்சயம் இல்லை என்பதே பதிலாக நம்மில் எல்லாரிடமும் இருக்கும்.
எனது பள்ளிப் பருவத்தில் பேருந்தில் பயணம் செய்வது எனக்கு ரொம்ப பிடித்தமானதாக இருந்தது. அதுவும் ஜன்னலோர இருக்கை கிடைக்கும் பட்சத்தில் அந்த பயணம் ரொம்ப அலாதியானது. அப்போதெல்லாம் சாலையோரம் நிறைய மரங்கள் இருக்கும். பயணக் களைப்பே தெரியாது. ஆனால் இன்றைய நிலைமை ரொம்பக் கொடுமை. அட ஒரு மரத்தைக் கூட கண்ணில் பார்க்க முடிவதில்லை. எல்லாம் வெட்டி சாய்க்கப் பட்டு விட்டது. வெயிலின் உஷ்ணம் வாகனம் முழுதும் நிரம்புகிறது. அப்போதெல்லாம் இரவு நேரப் பயணங்கள் ரொம்பவும் சுகமானது. பால் நிலா பேருந்தைப் பின் தொடர்ந்து வர மரங்கள் ஒவ்வொன்றாக கடக்கையில் மனதில் கவிதை ஊற்று எடுக்கும், இலகுவாகும். ஆனால் அதெல்லாம் இப்போது வெறும் கனவாகப் போய் விட்டது. நடந்து செல்பவனை இரு சக்கர வாகனத்தில் செல்பவன் மதிப்பதில்லை. இரு சக்கர வாகனத்தில் செல்பவனை எவனும் மதிப்பதில்லை. முக்கியமாக தண்ணீர் லாரி களும் , அரசுபேருந்துகளும் எதோ அவர்கள் ரோடு போலத்தான் செல்கிறார்கள். யம கிங்கிரர்களும் அவர்கள் தான்.
உங்களில் யாராவது பால் நிலா பின்னணியில், மரங்கள் கடக்க, வசந்த காலத்தில், இரவு நேரத்தில், சமீபத்தில் பேருந்தில் பயணம் செய்து இருக்கிறீர்களா?
-- இன்னும் எழுதுவோம் ல ........

Saturday, February 23, 2008

சில பழக்கங்களும், அதற்க்கான காரணங்களும் :

நம்மிடையே நிலவி வரும் / வந்த சில பழக்க வழக்கங்களும், அதற்கான உண்மையான காரணங்களும் பற்றி சிந்தித்தபோது உதித்தவை இவை:
நொறுங்க தின்றால் நூறு வயது வாழலாம்:
அட அட .. இந்த பழமொழி சொன்னவன் விளக்கமாக சொல்லாமல் போய் விட்டான். இதை மட்டும் நம்ம ஆட்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அடித்து நொறுக்குகிறார்கள்.
ஆனால் உண்மையில் நாம் சாப்பிடும் உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்பதே உண்மையான தத்துவம்.
இரவில் தயிர் சாப்பிடக்கூடாது:
இரவில் தயிர் அருந்துவதால் செரிமானம் பாதிக்கப் படுவதால் அறிவியல் ரீதியாகவே அதை இரவில் தவிர்ப்பது நல்லது.
சாணம் தெளிப்பது:
சாணம் ஒரு நல்ல கிருமி நாசினி. அதை தெளிப்பதால் வீட்டினுள் கிருமிகளின் வரவு தவிர்க்கப்படுகிறது மற்றும் அது தரையை கெட்டிப்படுதுவதுடன் புழுதி வராமலும் காக்கிறது.
இரவில் உண்ணாதே:
அந்த காலங்களில் எல்லோரும் இரவு ஏழு மணிக்கு முன்பே உணவு அருந்தி விடுவர். அப்போதெல்லாம் விளக்கு வெளிச்சம் குறைவு என்பதால் இந்த ஏற்பாடு. போதிய வெளிச்சம் இல்லாமல் உணவு உண்ணும்போது பூச்சிகள், பல்லி உணவில் கலக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இப்போது அந்தக் கவலை இல்லை. எனவே அந்த அறிவுரை இந்தக் காலத்திற்கு உதவாது.
---- இன்னும் எழுதுவோம்.

மயிலும்.. கிளியும்..

Wednesday, February 20, 2008

அவள்!

அந்த ஆறு
ஆரவாரமாகத்தான்
ஒடிகொண்டிருந்தது - அதனுடன்
அவள் சிரிப்பலைகளையும் சேர்த்து...
----- அவள்
எனக்கு ஆற்றில் தான்
அறிமுகமானாள் - அவள்
தனது துணிகளைத்தான்
துவைத்துக் கொண்டிருந்தாள் - ஏனோ!
என் மனசுதான்
அழுக்காகிப் போனது.
நாட்கள் நகர்ந்தன...
பார்வைப் பரிமாறல்கள்
தொடர்ந்தன.. - என்னுள்
ஆற்றங்கரையே சகலமும் ஆயிற்று.
வசந்தமும் கழிந்தது, -ஏனோ
சில நாட்களாய்
அவள் வருவதேயில்லை
அவளுக்காக கத்திருந்து
கண்களில் காளான்
பூத்துதான் போனது.
எதிர்க் கரைகள் கூட
எனக்காக இரகசியமாக அழுதன.
கரையோரமாக அவளின் அழியாத
காலடித் தடங்களை
இன்னமும் தேடிக்கொண்டுதானிருக்கிறேன்.
அந்த ஆறு
இன்னமும் ஒடிக்கொண்டுதானிருக்கிறது
-ஆனால்
சலனமின்றி, அமைதியாக....
-- 'என் மனசு'

கனவிலாவது...

என் புன்னகையைப்
பறித்துக் கொண்டு
கண்ணீரை மட்டும்
விட்டுச் சென்ற -என்
கனவுக் காதலியே! - நீ
கண்ணீரை மட்டுமா
விட்டுச் சென்றாய்... -ஆழகிய
கனவுகளையும் அல்லவா
விட்டுச் சென்றாய்...
விடியலைத் தேடும் - என்
வாழ்க்கையில் கண நேரம்
மின் மினியாய் மின்னி மறைந்தவளே!
என் கண்ணீர் கூட
காய்ந்து விடும்- ஆனால்
உன் நினைவுகள்
என்றும் காயாதடி!!
என் மனசுக்குள் கொலுசாய்
உன் நினைவுகள்
என்றும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
அடி என் கனவுக் காதலியே! - என்னை
கனவிலாவது காதலித்துவிடடி!!
-- 'என் மனசு'

முரண்

என் எதிர் வீட்டு சுவரில்
எழுதியிருந்தார்கள்
"சுவரில் எழுதாதே"
-- 'என் மனசு'

Monday, February 18, 2008

நாயன சத்தம் (ஒரு உயிரின் குரல்)

ஒரு ஞாயிறு மதியம் வீட்டில் அமர்ந்து TV பார்த்துக்கொண்டிருந்தபோது, TV ஒலியையும் மீறி அந்த நாயன சத்தம் தெருவிலிருந்து கேட்டது. அன்று முகூர்த்தநாள் என்பதால் ஏதேனும் மாப்பிள்ளை அழைப்பாக இருக்கும் என நினைத்து மீண்டும் தொலைக்காட்சியில் மூழ்கினேன். ஆனால் ஒற்றை நாயனமாக அந்த ஒலி விட்டு விட்டு கேட்கவே சாளரம் வழியே எட்டிப் பார்த்தேன். கந்தல் துணியுடன் 50 வயதுடைய ஒருவர் ஒவ்வொரு வீட்டு முன்பும் நின்றபடி ஒற்றை நாயனத்தை மிக அருமையாக வாசித்தபடி பிச்சை கேட்டுக்கொண்டிருந்தார். முன் நாட்களில் அவர் ஒரு அருமையான வாத்தியக் கலைஞர் ஆக இருந்திருக்க வேண்டும். திருவிழாக்களில் கண்டிப்பாக அவர் வாசித்திருக்கக் கூடும். அந்த அளவு இசை மிக நேர்த்தியாக இருந்தது. காலம் அவரை எப்படி மாற்றி விட்டது....அவரை மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ கலைஞர்களை இப்படித்தான் மாற்றி விட்டிருக்கிறது. மெல்லத் தமிழ் இனி சாகும் என்றான் கவிஞன். ஆனால் இன்று கிராமியக் கலையும் அழிந்து கொண்டிருக்கிறது. அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் தொலைந்து விட்டது. ஒரு வேளை உணவுக்காக பிச்சை எடுப்பதைத் தவிர வேறு வழி இல்லாமல் கற்ற கலையையும் வீதியில் இறக்கியாயிற்று. கனத்த மனதுடன் கொஞ்சம் சில்லரைகளை அவரிடம் அளித்தேன். அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் அனேகமாக அனைவரும் வீட்டினுள், தொலைக்காட்சியில் மூழ்கியிருந்தனர். ஒரு வீட்டில் அவரை அடித்து விரட்டாத குறைதான். வசவுகள் வேறு..இன்னும் பல வீடுகளில்அவரை கண்டு கொள்ளவே இல்லை.
இதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன்பு ஒரு மதிய வேளையில் இவரைப் போலவே மற்றொறு கலைஞர் இதே வீதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவரது நிலை இன்னும் பரிதாபம். பணத்தைக் கொண்டு வருவதற்குள் அவர் வீதியைத் தாண்டி விட்டிருந்தார். இவர்களைக் காணும்போது மனது வலிக்கிறது. திரு.S.ராமகிருஷ்ணன் ஒரு நூலில் குறிப்பிட்டிருந்தார், தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு இசைக் கலைஞர் (கோவில்களில் வாசித்துக்கொண்டிருந்தவர்) இன்று ஏதோ ஒரு நெடுஞ்சாலை உணவகம் ஒன்றில் சாம்பார் ஊற்றிக் கொண்டிருக்கிறார் என்று. காலம் மிக விசித்திரமானது....
........நீங்கள் இசைக்கலைஞர்கள் யாரையேனும் பார்க்க நேர்ந்தால், தயவு செய்து உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள். அது நீங்கள் இசைக்கலைஞர்களுக்கு செய்யும் உதவி மட்டும் இல்லை, அழிந்து கொண்டிருக்கும் இசைக்கும் செய்யும் உதவியுமாகும்.
---------------------'என் மனசு' -- இன்னும் விரியும்...

Friday, February 15, 2008

கதை சொல்லிகள்...

அநேகமாக எல்லாருக்கும் கதை கேட்கப் பிடிக்கும். ஒவ்வொரும் கதை சொல்லும் விதத்தில் கதையின் சுவை கூடும் அல்லது குறையும். ருஷ்யக் கதாசிரியர் 'சிங்கிஸ் ஐத்மாத்தவின்' கதை சொல்லும் பாங்கே அலாதியானது. ஒரு முறை, தான் சிறுவனாக இருந்தபோது நடந்த சுவையான சம்பவங்களை தன் மகன் நோய்வாய் பட்ட தருணத்தில், படுத்த படுக்கையாக இருந்தபோது அவர் சொல்லிய கதைகள் 'அப்பா சிறுவனாக இருந்தபோது' என்ற தலைப்பில் வெளி வந்து பெரும் வரவேற்பை பெற்றது. அவர் கதை சொன்ன பாங்கில் இன்று வரை யாரும் கதை சொல்லவே இல்லை. ஒரு குதிரையின் வாழ்க்கையை 'குல்சாரி' மூலம் அருமையாக, கண்ணீர் மல்க வெளிப்படுத்தியிருப்பார்.

காலம் மிதமிஞ்சிய வேகத்தில் சென்று கொண்டே இருக்கிறது. வாழ்க்கையை அதன் போக்கில் விட்டவர்கள் அதன் ஒட்டத்தினூடே அடித்துச்செல்லப்படுகிறார்கள். எங்கும் கண்ணுக்கெட்டிய வரை ஒரே போல் பனி படர்ந்த 'ஸ்தெப்பி வெளி'... முடிவில்லாத சாலைகள்....பழங்காலத்துக் கோட்டைகள்...இவை யாவற்றிலும் காலம் உறைந்திருக்கிறது. பல கதைகள் உறைந்திருக்கின்றன.

என் மனசு பக்கங்கள்.....

தனக்கென தனி வாசகர் வட்டத்தை வைத்திருக்கும் திரு.S.ராமகிருஷ்னன் அவர்களுக்கு என் முதல் வணக்கம். எனது பயனத்தையும் அவரிடமிருந்தே தொடர்கிறேன். வாசிப்பில் ருசி கண்ட எனக்கு எழுதவும் ருசிப்படுத்தியது அவர் எழுத்து...

மனசு.....
மனசு என்பது என்ன??? பொருளா?... இல்லை உணர்வா?....

மனசு ஒரு ஆச்சர்யப்படத்தக்க விசயம்...அதை மாயக் கண்ணாடி அல்லது மாயக் குதிரை என்பார்கள். உலகிலேயே அதி வேகமானது மனசுதான். ஜப்பானில் இருந்து ஷண நேரத்தில் மனக்குதிரையில் இலங்கா செல்லலாம். விநாயகர், சிவன்-பார்வதியை சுற்றி வந்து பழம் வாங்கியதற்கு பதிலாக இன்னும் வேகமாக மனக்குதிரையில் சுற்றி வந்து பழம் வாங்கியிருக்கலாம்.

குதிரைக்கு கடிவாளம் போடுவது போல மனதினை கடிவாளமிட்டவன் வாழ்க்கையை வெற்றி கொள்கிறான். மனதினை கடிவாளம் போடாதவன் மங்கையிடமோ இல்லை மதுவிடமோ சரணாகதி அடைகிறான். நமது தேடல்கள் எல்லாம் மனதின் தேடல்களே......தேடல்களின் வெளிப்பாடே திரு.S.ராமகிருஷ்னன் போன்றோர்.

ஒரு பழத்தில் நூற்றுக்கணக்கான விருட்சங்கள் மறைந்திருந்தாலும் தேடலில் வெற்றி பெற்றவையே முளை விடுகின்றன...ராமகிருஷ்னன்களாகின்றன...

இங்கே எனது மனக் குதிரையை முடிந்த மட்டும் தட்டுகிறேன். அவை ஒடும் வரை ஒடட்டும்...