பக்கங்கள்

Monday, February 18, 2008

நாயன சத்தம் (ஒரு உயிரின் குரல்)

ஒரு ஞாயிறு மதியம் வீட்டில் அமர்ந்து TV பார்த்துக்கொண்டிருந்தபோது, TV ஒலியையும் மீறி அந்த நாயன சத்தம் தெருவிலிருந்து கேட்டது. அன்று முகூர்த்தநாள் என்பதால் ஏதேனும் மாப்பிள்ளை அழைப்பாக இருக்கும் என நினைத்து மீண்டும் தொலைக்காட்சியில் மூழ்கினேன். ஆனால் ஒற்றை நாயனமாக அந்த ஒலி விட்டு விட்டு கேட்கவே சாளரம் வழியே எட்டிப் பார்த்தேன். கந்தல் துணியுடன் 50 வயதுடைய ஒருவர் ஒவ்வொரு வீட்டு முன்பும் நின்றபடி ஒற்றை நாயனத்தை மிக அருமையாக வாசித்தபடி பிச்சை கேட்டுக்கொண்டிருந்தார். முன் நாட்களில் அவர் ஒரு அருமையான வாத்தியக் கலைஞர் ஆக இருந்திருக்க வேண்டும். திருவிழாக்களில் கண்டிப்பாக அவர் வாசித்திருக்கக் கூடும். அந்த அளவு இசை மிக நேர்த்தியாக இருந்தது. காலம் அவரை எப்படி மாற்றி விட்டது....அவரை மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ கலைஞர்களை இப்படித்தான் மாற்றி விட்டிருக்கிறது. மெல்லத் தமிழ் இனி சாகும் என்றான் கவிஞன். ஆனால் இன்று கிராமியக் கலையும் அழிந்து கொண்டிருக்கிறது. அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் தொலைந்து விட்டது. ஒரு வேளை உணவுக்காக பிச்சை எடுப்பதைத் தவிர வேறு வழி இல்லாமல் கற்ற கலையையும் வீதியில் இறக்கியாயிற்று. கனத்த மனதுடன் கொஞ்சம் சில்லரைகளை அவரிடம் அளித்தேன். அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் அனேகமாக அனைவரும் வீட்டினுள், தொலைக்காட்சியில் மூழ்கியிருந்தனர். ஒரு வீட்டில் அவரை அடித்து விரட்டாத குறைதான். வசவுகள் வேறு..இன்னும் பல வீடுகளில்அவரை கண்டு கொள்ளவே இல்லை.
இதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன்பு ஒரு மதிய வேளையில் இவரைப் போலவே மற்றொறு கலைஞர் இதே வீதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவரது நிலை இன்னும் பரிதாபம். பணத்தைக் கொண்டு வருவதற்குள் அவர் வீதியைத் தாண்டி விட்டிருந்தார். இவர்களைக் காணும்போது மனது வலிக்கிறது. திரு.S.ராமகிருஷ்ணன் ஒரு நூலில் குறிப்பிட்டிருந்தார், தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு இசைக் கலைஞர் (கோவில்களில் வாசித்துக்கொண்டிருந்தவர்) இன்று ஏதோ ஒரு நெடுஞ்சாலை உணவகம் ஒன்றில் சாம்பார் ஊற்றிக் கொண்டிருக்கிறார் என்று. காலம் மிக விசித்திரமானது....
........நீங்கள் இசைக்கலைஞர்கள் யாரையேனும் பார்க்க நேர்ந்தால், தயவு செய்து உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள். அது நீங்கள் இசைக்கலைஞர்களுக்கு செய்யும் உதவி மட்டும் இல்லை, அழிந்து கொண்டிருக்கும் இசைக்கும் செய்யும் உதவியுமாகும்.
---------------------'என் மனசு' -- இன்னும் விரியும்...
Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

No comments: