திருநெல்வேலிக்கு அலுவல் நிமித்தம் சென்றபோது புகழ் வாய்ந்த நெல்லையப்பர் கோவிலை எப்படியும் காண விரும்பி நானும் என் நண்பரும் இரு சக்கர வாகனத்தில் ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை கிளம்பினோம். ஏனோ தெரியவில்லை... திருநெல்வேலி பிடித்த ஊராகி விட்டது. கோவில் செல்லும் வழி ரம்மியமாக இருந்தது. ஏற்கனவே, திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி பக்கம் எல்லாம் கோவில்களை பார்த்து ரசித்து (சாமியும் கும்பிட்டேனுங்க்னா) இருந்த படியால் கோவிலின் அழகை மிகவும் ரசித்தேன். அதன் பிரம்மாண்டம் மிக அழகு. மிகவும் பழமை வாய்ந்த கோவில் என்பதும் இதன் சிறப்பு ( சுமார் 1500 வருடங்கள் பழமை வாய்ந்தது). இங்கு இறைவன் சுயம்பு வடிவானவர். எனக்கு ஒரு பழக்கம். இது போல பழைய புகழ் பெற்ற ஸ்தலங்களுக்கு சென்றால் அதன் வரலாற்றை கேட்டு விடுவது வழக்கம். அங்கு இருந்த அர்ச்சகரிடம் கேட்ட போது அழகாக சொன்னார். ஒரு காலத்தில் அரண்மனைக்கு பால் கொண்டு செல்லும்போது இந்த ஸ்தலம் இருந்த இடத்தில் மூங்கில் மரங்கள் நிறைந்து இருந்த போது அந்த வழியே செல்லும் இடையர்கள் வைத்திருந்த மண் பானையில் பால் குறிப்பிட்ட இடத்தில் வழக்கமாக சிந்தியது. தினமும் பால் குறைவதைக் கண்ட மன்னன் அதற்கான காரணத்தைக் கண்டு அந்த மூங்கில் மரத்தை வெட்ட உத்தரவிட்டான். அதை வெட்டும்போது மரத்திலிருந்து ரத்தம் கொட்டியது. அங்கு மன்னன் வந்து அந்த அதிசயத்தைக் காணும் போது இறைவன் சுயம்புவாக தோன்றி மன்னனுக்கு காட்சி அளித்தான். மூங்கில் மரத்தை வெட்டியதால் ஏற்ப்பட்ட சேதம் காரணமாக சுயம்பு லிங்கத்தில் ஒரு பகுதி சேதத்துடன் காணப் படுகிறது. அங்கு கோவில் எழுப்பி இறைவழிபாடு நடத்தினான் மன்னன்.
சரி, திருநெல்வேலி என பேர் வந்தது எப்படி தெரியுமா????
அந்த இறைவனுக்கு அந்தனர் ஒருவர் தினசரி நெல்லை கொண்டு அமுது படைத்து இறை வழிபாடு நடத்தி வந்தார். ஒரு நாள் ஈர நெல்லை காய வைத்து விட்டு தாமிர பரணி ஆற்றில் குளித்து விட்டு வர சென்றார். அப்போது திடீரென மழை வந்து விட்டது. அந்தனர் ஐயோ, இறைவனுக்கு இன்று அமுது படைத்து வழிபட முடியாமல் போய் விடுமோ என்று அலறி அடித்து கோவிலுக்கு ஓடினார். அங்கு என்ன நடந்தது தெரியுமா? காய்ந்து கொண்டிருந்த நெல் இருந்த இடத்தில் நன்கு வெயில் அடித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் மழை பெய்து கொண்டிருந்தது. நெல்நனையாமல் வேலி அமைத்து காத்த படியால் இறைவனுக்கு நெல் வேலி காத்தவர் என்றுபெயர் வந்தது. அதனுடன் திரு என்ற அடைமொழி சேர்ந்து திருநெல்வேலி என்று ஆயிற்று.
ஸ்ஸ்ஸ் அப்பாடி மூச்சு வாங்குது... நல்ல கலைஅம்சங்களுடன் கோவில் விரிந்து கிடக்கிறது. அங்கு காந்திமதி அம்பாள் சன்னதியும் இருக்கிறது. அதைப் பற்றி அங்கிருந்த அர்ச்சகரிடம் கேட்டபோது ஒரே வரியில் சொல்லி விட்டார் .... என்ன தெரியுமா ??? நெல்லையப்பர் - சுயம்பு வடிவம் . காந்திமதி அம்பாள் - சக்தி வடிவம். மேற்கொண்டு எதையும் சொல்ல விரும்பாமல் அவர் முடித்துக் கொண்டார். எல்லாரும் காண வேண்டிய கோயில் .....
No comments:
Post a Comment