நல்ல ஹோட்டலில் தான் சுவையான உணவு கிடைக்கும் என்று நம்ம ஆட்கள் கடைகளை தேடி வெகு தூரம் அலைகிறார்கள் . அதனால்தான் மாமி மெஸ் களும் , மாமா மெஸ் களும் அங்கே இங்கே கடை போட்டு இருக்கின்றன. உண்மையில் சாப்பாடு மட்டும் சுவையைத் தருவதில்லை. சாப்பிடும் இடமும், சூழ்நிலையும் ருசியை அதிகரிக்கின்றன அல்லது குறைக்கின்றன. சில சமயம் பரிமாறுபவர்கள் கூட, பரிமாறும் விதத்தில் கூட சுவையைக் கூட்டுகின்றனர். உதாரணமாக, தொலை தூரத்தில் ஒரு மலைக்கோயிலில் கடைகளே இல்லாத இடத்தில், நல்ல உச்சி வெயிலில் உங்களுக்கு வெண்பொங்கல் கெட்டிச்சட்னியுடனோ அல்லது புளியோதரயோ உங்களுக்கு கிடைத்தால் நிச்சயம் அது உங்களுக்கு அமிர்தம் போலத்தான் அது சுமாராக இருந்தாலும்.
ஊர்ப்பக்கம் வயல் காடுகளில் கூலி வேலைக்கு செல்வோர், சாப்பாட்டில் மோர் விட்டுக் கரைத்து வெங்காயம், பச்சை மிளகாய், மோர் மிளகாய் வகையரக்களுடன் மதிய சாப்பாடு கொண்டு செல்வர். நல்ல உச்சி வெயிலில், வயலில் இந்த உணவை விரும்பாதோர் இருக்க முடியுமா
ஆற்றோரங்களில் அப்போதே மீன் பிடித்து அங்கேயே மிகக் குறைந்த மசாலா கொண்டு வறுத்துதரும் மீன் வறுவல் உங்கள் நாவில் எச்சில் உண்டாக்க வில்லையா ?? இந்த சுவை 5 ஸ்டார் ஹோட்டெல்களில் கூட கிடைக்காது. என்ன சொல்றீங்க ?
அப்புறம் காதலன்களுக்கு, காதலியின் எச்சில் ஐஸ்கிரீம் எவ்வளவு சுவையாக இருக்கும் என்பதெல்லாம் வேறு விஷயம். ஒரே இள நீரில் இரண்டு ஸ்ட்ரா போட்டு குடிப்பது .. ஹி .. ஹி.. ஹீ.. அதெல்லாம் தேவாமிர்தம். புது மனைவியின் சாப்பாடு ரொம்பவே ருசிக்கும் வாய்ல வைக்க முடியாட்டியும்... அப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சு இவனே சாப்பாடு செய்ய கற்றுக் கொள்வான் வேறு வழி இல்லாமல்.
மொத்தத்தில சாப்பாடு மட்டும் ருசியை கொடுப்பதில்லை ... இடமும், சூழ்நிலையும், பரிமாறுபவர்கள் எல்லாம் சேர்ந்து தான் ருசியை தீர்மானிக்கின்றன.
1 comment:
நல்லாத்தான் இருக்கு உங்க சாப்பாட்டு புராணம் ... எனக்கும் கூட அந்த மீன் வறுவலின் ருசி எச்சில் ஊறுகிறது.
Post a Comment