சுமார் 1000 வருடங்களுக்கு மேல் பழமையான இந்த கோவில் காரமடை ரங்கநாதர் கோவிலின் அருகே இடதுபுறம் அமைந்துள்ளது. திருமண, சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் சிவன், அம்பாள், சிவதுர்க்கைக்கு வஸ்திரம் அணிவித்து, வேண்டிக்கொள்கிறார்கள்.
இக்கோயிலில் உள்ள சிவலிங்கம், பிற தலங்களைப்போல இல்லாமல் சற்று பட்டையாக இருக்கிறது. இந்த லிங்கம் செந்நிறமாக காட்சியளிப்பது மற்றொரு விசேஷம். இவருக்கு பிரதான ஆவுடையார் தவிர, சன்னதிக்குள் சிவலிங்கத்தைச் சுற்றி, மற்றொரு ஆவுடையார் போன்ற அமைப்பில் தரையில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இவர் இரண்டு ஆவுடையார்களுடன் காட்சி தருகிறார். இந்த அமைப்பை காண்பது அரிது.
இந்த வித்யாசமான அமைப்பினால் கோவில் பூசாரி, ஆவுடையாரின் மேல் நின்று இன்னொரு ஆவுடையாரின் மேலுள்ள லிங்கத்தை பூசை செய்வது போல் உள்ளது (ஒரு லிங்கத்தின் மேல் நின்று மற்றொரு லிங்கத்தை பூசிப்பது போல).
இன்னுமொரு முக்கிய விஷேசம், பிரதோஷ காலங்களில் சிவனுக்கு அமுது ( வெறும் சாதம் சிறிதளவு நெய் கலந்து) திருமேனியில் சார்த்தபடுகிறது.. பின்னர் அந்த அமுதை எடுக்கும்போது லிங்கத்தின் கழுத்தருகே சிறிய அளவில் பச்சை நிறமாக அமுது காட்சி தருகிறது (நஞ்சை உண்ட சிவனின் கழுத்தில் ஆலகால விஷம் தங்கி உள்ளதாக ஐதீகம்).. இத்தனைக்கும் அமுது படைக்கும் முன்பு சிவலிங்கம் நன்கு தேய்த்துக் கழுவப் படுகிறது..
முகலாயர் காலத்தில் கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட போது, நஞ்சன்கூடு (மைசூரு) நஞ்சுண்டேஸ்வரர் கோவிலிலிருந்து எடுத்து வரப்பட்ட கல்லைக் கொண்டு இங்கு கோவில் அமைக்கப்பட்டது. எனவே அந்த கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வழிபடலாம் .
மதுரை மீனாட்சியம்மன் கோயில் போலவே, சிவன் சன்னதியைச் சுற்றிலும் கோஷ்டத்தில் 8 யானைகள் சுவாமி விமானத்தை தாங்கியபடி அமைக்கப்பட்டிருக்கிறது.அம்பாளின் திருநாமம்-லோகநாயகி அம்பாள். விநாயகர், ஆறுமுகவேலவர், சண்டிகேஸ்வரர், கால பைரவர் ஆகியோருக்கும் இங்கே சன்னதிகள் உண்டு.
நவராத்திரி விழாவின் பத்தாம் நாளில் ரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இக்கோயிலுக்கு வந்து அம்பு போடும் நிகழ்ச்சிக்கு சிவனை அழைத்துச் செல்வது விசேஷம். அப்போது சிவன், பெருமாள் இருவரும் அருகருகில் செல்கின்றனர். அந்நேரத்தில் மட்டுமே இவ்விருவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.
அனைவரும் தரிசிக்க வேண்டிய அற்புதமான ஸ்தலம். வாய்ப்பை உருவாக்கி சென்று வாருங்கள்.
No comments:
Post a Comment