வெறும் வார்த்தை ஜாலங்களாலும், அறிக்கைகளாலும் ஈழப் பிரச்சினையை கையில் எடுத்து அரசியல் நடத்தும் தலைவர்களே !
தமிழன் ஒவ்வொருவனின் வேட்டியும் , கோவணமும் ஒவ்வொன்றாக பறிபோய் கொண்டிருக்கிறது . வெறும் வாய் சவடல்களும், வெத்து அறிக்கைகளும் ஈழத் தமிழர்களின் வாழ்வை வளம்பெற வைக்காது. முன்னாள் , இந்நாள் முதல்வர்களை இலங்கை வர ராஜபக்ட்சே விடுத்த அறிவிப்புக்கு இரு தலைவர்களும் காரணங்கள் கூறி தப்பித்து விட்டனர்.
ஆனால் இரு தலைவர்களும் நேரில் இலங்கை சென்று ராஜ பட்சே போர் நிறுத்தம் செய்யும் வரை அங்கு உண்ணாவிரதம் இருந்து இருப்பார்களே ஆனால் இன்று கதையே வேறு. ஆனால் இவர்கள் பொதுக்குழு , செயற்குழு என்று குழுக்களை கூட்டுவதேற்கே மாதங்கள் ஆகின்றன. ஆனால் அறிக்கைகள் என்னவோ ரத்த சாயம் பூசித்தான் இருக்கும்.
போர் நிறுத்தம் காண, மத்திய அரசால் முடியாது ... ஆனால் காங்கிரஸ் காரர்கள் அதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். டாங்கிகளும், ஆயுதங்களும் தமிழகம் வழியாகவே செல்லும் சிங்களர்களுக்கு. நாமும் வேண்டுகோள் விட்டே நாட்களை கடத்தி விடுவோம். ஆட்சியை பற்றி பயப்படுபவர்கள், என்னால் தான் நல்லது செய்ய முடியும் என அறிக்கை விடுவதை விட்டு விடுங்கள். யாரை ஏமாற்ற இவை எல்லாம்.
போர் நிறுத்தம் காண ஒரே வழி என்னவென்றால்....
அனைத்து கட்சி தலைவர்களும் ராஜபட்சே அழைத்ததன் பேரில் சென்றுஅங்கு பேச்சு நடத்தி, ஒரு முடிவுக்கு வரும் வரை அங்கேயே இருந்து வேண்டுமானால் இலங்கை நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதம் இருந்து ஈழ மக்களை காப்பாற்றுங்கள். அப்படி நீங்கள் செய்தீர்களானால் இது உலகம் முழுதும் கவனம் ஈர்க்கும். கண்டனங்கள் பெரிதாகும்.. உலகளாவிய ஆதரவும் கிட்டும். அதை விடுத்து இப்படியே அறிக்கை விட்டால் , கடைசியில் அறிக்கை மட்டும் மிஞ்சும். ஈழம் ரத்தத்தில் கரைந்திருக்கும்.
எல்லாவற்றிற்கும் ஒரு கால அவகாசம் வேண்டும். பரீட்சை கூட மூன்று மணி நேரம் தான். எனவே உடனே யோசியுங்கள்... முடிவெடுங்கள் ... செயல்படுத்துங்கள் .... ( நன்றே செய் , அதை இன்றே செய் )